கட்டாக் : ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று உள்ளது. பெர்ஹாம்பூர், ஷங்கர்பூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ளூர் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்று உள்ளது. விளையாட்டில் மஹிசிலாந்தா கிராமத்தை சேர்ந்த லக்கி ராவத் என்பவர் நடுவராக செயல்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஆட்டத்தின் போது நடுவர் லக்கி ராவத் அறிவித்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு தரப்புக்கு ஆதரவாக தவறான முடிவை லக்கி ராவத் அறிவித்ததாக கூறி வீரர்கள் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கி உள்ளனர். இதில் பெர்ஹாம்பூர் அணியைச் சேர்ந்த வீரர்கள் லக்கி ராவத்துடன் சண்டையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பெர்ஹாம்பூர் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் லக்கி ராவத்தை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கூட்டத்தில் இருந்த ஸ்மருதி ரஞ்சன் ராவத் என்கிற மோனு என்பவர் ஆவேசமாக லக்கி ராவத்தை தாக்கி கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : வேலியே பயிரை மேய்ந்தது - இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!
கத்திக் குத்து தாக்குதலால் தீவிர காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த லக்கி ராவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மருத்துவமனையில் லக்கி ராவத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லக்கி ராவத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற இளைஞரகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கிரிக்கெட் ஜுரம் அடிக்க தொடங்கி உள்ளது. விடுமுறை வந்தால் போதும் கைகளில் கிரிக்கெட் மட்டைகளுடன் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என கிரிக்கெட் விளையாட காலி மைதானங்களை நோக்கி கிளம்பத் தொடங்கி உள்ளனர்.
அப்படி கிரிக்கெட் விளையாடும் போது சிறு சிறு பிரச்சினைகள் எழத்தான் செய்யும். அதை அப்போதே மறந்து மீண்டும் நண்பரகளாக மாறி விடுவது மிக நல்லது. விளையாட்டில் ஏற்பட்ட மனக் கசப்புகளை, நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு பழித் தீர்க்க வேண்டும் என சிந்திப்பது மிக மோசமான ஒன்று.
இதையும் படிங்க : Parliament Adjourned : மீண்டும் நாடாளுமன்றம் முடங்கியது - எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!