ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவார் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப். 17) அதிகாலை எரிவாயு டேங்கர் லாரி ஒன்று லாரி மீது மார்பிள் லோடு ஏற்றி வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இந்த மோதலில் எரிவாயு டேங்கர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த பயங்கர வெடி விபத்து காரணமாக 500 மீட்டர் சுற்றளவுக்கு தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவயிடத்துக்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணித்தனர். இந்த விபத்து குறித்து அஜ்மீர் போலீசார் கூறுகையில், எரிவாயு டேங்கர் லாரி வெடித்ததில் 2 லாரிகள் தீப்பிடித்தது மட்டுமில்லாமல் அருகே இருந்த ரிப் நவாஸ் காலனி, மிஷ்ரி புரா நகர் பகுதிகளுக்கும் தீ பரவியது.
இதனால் 6 வீடுகளும், வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின. 4 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். இரண்டு லாரிகளும் தீப்பிடித்த உடனேயே எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சில மணி நேரங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தோம்.
இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் நிலைமை சீராகிவிட்டது. இந்த விபத்துக்காண காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் காணப்பட்டன, அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
இந்த விபத்தை நேரில் கண்டு பொதுமக்கள் கூறுகையில், அதிகாலை 4 மணி அளவில் பலத்த வெடி சத்தம் கேட்டது. எழுந்து பார்க்கையில் சாலையில் 2 லாரிகள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இந்த வெடிச்சத்தம் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராம மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால் பலர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் மோகம்.. தாய் கழுத்தை நெரித்து கொலை.. போலீசாரிடம் தற்கொலையென புகார்..