கொல்கத்தா : மேற்கு வங்க மாநில கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலில் பெருவாரியான இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதி கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் மூன்று பகுதிகளாக நடைபெற்றது. கிராமப்புற பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என மொத்தம் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து ஏறத்தாழ 700 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று (ஜூலை. 11) வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பெருவாரியன இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்துடன் காணப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 ஆயிரத்து 560 கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி உள்ளதாகவும் ஏறத்தாழ 705 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதேபோல் பாஜக 9 ஆயிரத்து 621 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றும் 169 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
மற்றபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 ஆயிரத்து 908 இடங்களில் வெற்றி, 86 இடங்களில் முன்னிலையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 ஆயிரத்து 515 இடங்களில் வெற்றியும், 71 இடங்களில் முன்னிலையிலும் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து உள்ளது. ஏறத்தாழ 212 கிராம பஞ்சாயத்துகளையும், 7 தாலுகா பஞ்சாயத்துகளையும் கைப்பற்றி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இன்னும் சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முடிவுகளில் மாற்றம் வரலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பெரும் சவாலாக விளங்கும் பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை. நந்திகிராம் தொகுதியை தனது கோட்டையாக வைத்து உள்ள சுவந்து அதிகாரி கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானார்ஜியை ஏறத்தாழ 1 ஆயிரத்து 900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்கள் தனது கட்சிக்கு அளித்து வரும் அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவித்து உள்ளார். இது குறித்து தன் சமுக வலைதள பக்கத்தில், கிராமப்புற வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மேற்கு வங்கம் மாநில கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் காணப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளதால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147