மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நானா பேத் பகுதியில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) போக்குவரத்து காவல் துறையினர் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைப் பறிமுதல் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, நோ பார்க்கிங் பகுதியில் பைக்கில் ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரிடம் வாகனத்தை இங்கிருந்து எடுக்காவிட்டால், பறிமுதல்செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.
அவரோ, நோ பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்தவில்லை. சாலை ஓரத்தில்தான் இரண்டு நிமிடங்கள் நின்று கொண்டிருக்கிறேன். நான் உடனே கிளம்பிவிடுவேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், காவல் துறையினரோ, 'விதியை மீறியுள்ளீர்கள்' கண்டிப்பாக வாகனம் பறிமுதல்செய்யப்படும் என்ற கூறியுள்ளனர். பைக்கில் இருந்த நபரோ, கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.
வேறு வழியின்றி, காவல் துறையினர், அவரை பைக்குடன் டோயிங் வண்டியில் ஏற்ற, உத்தரவிட்டனர். அதன்படி, அந்நபரை வாகனத்துடன் அந்தரத்தில் தூக்கினர். இதைப் பார்த்த பொதுமக்கள், அங்கிருந்த காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தின் புகைப்படங்களைப் பகிரும் பலரும், காவல் துறையினரின் இச்செயலால் வாகனத்தில் இருந்தவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அவசரகாலப் பயன்பாட்டுக்கு 'சைகோவ்-டி' தடுப்பூசிக்கு அனுமதி