டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே திமுக தலைமையிலான அரசை ஆளுநர் ரவி மறைமுகமாக விமர்சித்து வந்தார். இதற்கு ஆளுநருக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உள்பட திமுக பிரமுகர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர முடியாது என ஆளுநர் பிறப்பித்த உத்தரவால், தமிழ்நாடு அரசியல் களம் மேலும் சூடு பிடித்தது. அதேநேரம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று திமுகவினர் குறித்து புகார் மனுவை அளித்தனர்.
இதனால், ஆளுநர் மத்திய அரசின் அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார் எனவும் பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்த நேரத்தில்தான், கடந்த ஜூன் 14 அன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால், செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்து அளிக்குமாறும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் பரிந்துரைத்து ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.
அமைச்சர்களின் இலாகா பங்கீடை ஏற்றுக் கொண்ட ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது என, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அட்டர்னி ஜெனரல் உடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்குமாறு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் தமிழ்நாடு அமைச்சரவை இசைவு ஆணை கோரிக்கையை ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பியதாகவும், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை பின்பற்றியதால்தான் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி - ஆர்.எஸ்.பாரதி