அசாம்: அசாம் மாநிலம் கவுஹாத்தி நகருக்கு அருகே உள்ள ராணி வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இருக்கின்றன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் சென்று அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 3) நள்ளிரவில் மூன்று யானைகள் உணவு தேடி, பனிச்சந்தா பகுதியில் உள்ள பாக்குத் தோட்டத்திற்குள் நுழைந்தன. யானைகள், பாக்கு மரங்களை முட்டி சாய்த்தன. அப்போது, மரம் ஒன்று அருகில் இருந்த மின்கம்பம் மீது சாய்ந்தது. மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்த நிலையில், மரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், மரத்தை முட்டிக் கொண்டிருந்த யானைகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூன்று யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டன.
இன்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) காலையில் யானைகள் உயிரிழந்தது தொடர்பாக அறிந்த பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் குவிந்து, இறந்து கிடந்த யானைகளை பார்த்தனர். ஏராளமான மக்கள் யானைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். யானைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மூன்று யானைகளையும் அப்பகுதியிலேயே புதைக்க வேண்டும் என பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து ராணி வனப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, "மின்சாரம் தாக்கியதில் யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மக்கள் யானைகளுக்கு இறுதிச்சடங்குகள் செய்து வருகின்றன. எல்லாம் முடிந்த பிறகு மூன்று யானைகளின் உடல்களும் சம்பவம் நடந்த இதே இடத்தில் புதைக்கப்படும்" என்றார்.
மேலும், யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வராமல் தடுப்பதற்காக அகழிகள் தோண்ட வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் இதேபோல் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மே மாதம் ஆந்திராவில் நான்கு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. ஒடிசா மாநில வனப்பகுதிகளில் இருந்து வந்த இந்த யானைகள் குடிநீர் தேடி சென்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.