டெல்லி: கரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அலை அடுத்த 6 அல்லது 8 வாரத்தில் வரக்கூடும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா (Randeep Guleria) சனிக்கிழமை (ஜூன் 19) எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் அவர் கூறுகையில், “நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது நிச்சயம் கிடையாது. இதற்கு தற்போதுவரை எந்தவொரு அறிகுறியும் ஏற்படவில்லை. எனினும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய தொற்றுநோயியல் வல்லுநர்கள் கோவிட்-19 மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் அது, செப்டம்பர்-அக்டோபர் முதல் தொடங்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தனர். நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோவிட்-19 தொற்றுநோயின் மிருகத்தனமான இரண்டாவது அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது.
தினசரி ஏராளமான பேர் உயிரிழந்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வழங்கல் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. கரோனா இரண்டாவது அலையின் போது நாட்டில் லட்சக்கணக்கான பாதிப்புகள் தினந்தோறும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'நீட் அநீதி'- நடிகர் சூர்யா