புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் மூன்று முறை வழக்கமான நிறத்திலிருந்து மாறி செந்நிறமாக காட்சியளித்தது.
குருசுக்குப்பம் கடற்கரையில், கழிவுநீர் கலக்கும் பகுதியில் இருந்து தொடங்கி காந்தி சிலை பின்புறம் வரை கடல் நீரின் ஒரு பகுதி செந்நிறமாக மாறியது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் நீல நிறத்திற்கு வந்தது. இந்த கடல்நீர் நிறம் மாற்றம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடல்நீர் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்தனர்.
கடற்பாசிகள் நச்சுக்களை உமிழ்வதால் செந்நிறமாக கடல் நீர் மாறியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடைய புதுச்சேரி கடல் நிறம் மாறியது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் கமிட்டி அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனர் வரலட்சுமி, அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக கடல்சார் கல்விதுறைத் தலைவர் மோகன்ராஜ், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மரைன் பயாலஜி மைய உதவி பேராசிரியர் குமரேசன், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய கமிட்டி ஆய்வுக்காக அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டினர் இன்று(டிச.20) மதியம் குருசுக்குப்பம் கடற்கரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கடல் நிறம் மாறிய போது எடுக்கப்பட்ட மாதிரிகளையும் சோதித்தனர். இது தொடர்பான அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் வழங்கப்படும் என ஆய்வின் முடிவில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகரித்து வரும் புதியவகை கரோனா தொற்று.. உலக சுகாதார அமைப்பு எச்சரிப்பது என்ன?