ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் மகள் நக்ஷத்ரா (6), அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். குழந்தையின் தந்தை மகேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அவருடைய தந்தை உயிரிழந்துள்ளார். அதற்காக இந்தியா திரும்பிய மகேஷ் வீட்டில் இருந்ததாகவும், அப்போது தனது மனைவி வித்யாவை அவர் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மகேஷ், தாய் சுனந்தா (62), மற்றும் மகள் நக்ஷத்ராவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த குழந்தை நக்ஷத்ராவை, மகேஷ் கோடாரியால் தலையில் பலமாக தாக்கி கொடூரமாக கொலை செய்தார். குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகேஷின் தாய் சுனந்தாவையும், அவர் அதே கோடாரியால் தாக்கிய நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கொலை செய்து விட்டு தப்பி ஓட முயற்சித்த மகேஷை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையிலும் அடைத்தனர். இதனையடுத்து மகேஷிடம் போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை இடையூராக இருந்ததால் கொலை செய்ததாக மகேஷ் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
மேலும், இந்த கொலையை அரங்கேற்ற முன் கூட்டியே திட்டமிட்ட மகேஷ், கோடாரியை ஆன்லைனில் ஆடர் செய்துள்ளார். ஆனால் அது கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து வீட்டின் அருகே உள்ள கொல்லன் பட்டரையில் புதிதாக கோடாரி செய்து அதன் மூலம் தாய் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்த பெண் ஒருவரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதே அவரின் திட்டமாக இருந்திருக்கிறது என போலீஸார் தரப்பில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் கூறப்படுகிறது.
ஆனால் அவரின் திட்டத்தில் மகள் நக்ஷத்ரா மட்டும் பலியான நிலையில் மகேஷ் போலீஸில் கையும், களவுமாக சிக்கியுள்ளார். இந்த சூழலில்தான், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகேஷ் அங்கு வைத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பாதிப்படைந்த மகேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷின் மனைவி வித்யா உயிரிழப்பிலும் சந்தேகம் இருப்பதாக மகேஷின் உறவினர்களே போலீஸில் தகவல் அளித்துள்ளனர். வித்யாவை, மகேஷ் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரின் உயிரிழப்பு கொலையாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் போலீஸில் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காதலுக்கு தடையாய் இருந்த தாய்.. காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சிறுமி?