டெல்லி: மருத்துவ காரணங்களுக்காக தனது கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்குமாறு பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் ஏற்கனவே அக்டோபர் 5ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் 25 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருந்த பெண்ணின் உடல் நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவக் குழுவை அமைக்குமாறு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.9) நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனுதாரரை மருத்துவ ரீதியாக கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்தனர்.
மேலும், ஒரு பெண்ணின் உடலின் மீதான உரிமையை நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. தேவையற்ற கர்ப்பம் ஒரு குழந்தை உலகிற்குக் கொண்டு வரப்பட்டால், அத்தகைய குழந்தையை வளர்க்கும் பொறுப்பின் பெரு ம்பகுதி பொறுப்பை மனுதாரரே ஏற்க வேண்டியிருக்கும். ஆகையால், அந்த பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தையை வளர்க்கும் நிலையில் அவர் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (அக் 10), மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தினார். மேலும், அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள கரு பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அப்படி கருக்கலைப்பு செய்தால், அது கருக்கொலை ஆகும் என்றும் மருத்துவ வாரியம் கூறியதாக ஐஸ்வர்யா பதி கூறினார்.
இதனை அடுத்து, தலைமை நீதிபதி (CJI) டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதற்கான முறையான விண்ணப்பத்தைக் கொண்டு வருமாறு ஐஸ்வர்யா பதியிடம் தெரிவித்தது.
மேலும் உத்தரவை நிறைவேற்றிய அமர்விற்கு, "எய்ம்ஸ் மருத்துவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். ஆகவே தயவுசெய்து இப்போதைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உத்தரவை நிறுத்தி வையுங்கள்" என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன?