பூரி (ஒடிசா): மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2ஆம் தேதி, உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வுட்லாண்ட்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்ட் செய்யப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் நேரில் சென்று சவுரவ் கங்குலி குறித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள், கங்குலி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்தனர்.
இச்சூழலில், ஒடிசாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், ‘கெட் வெல் சூன் தாதா’ என்ற மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ள சுதர்சனுக்கு, 2014ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.