சென்னை: ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அலுவலர் சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆகி, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக இருந்த சேர்மராஜன் கடந்த வியாழக்கிழமை, போலீஸ் அகாடமியின் இயக்குநர் பதவியை ஏற்றார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட சேர்மராஜன், பிகார் கேடரில் ஐபிஎஸ் பயிற்சியினை முடித்து, இருபது ஆண்டுகளாக Intelligent Bureau எனப்படும் உளவுத்துறையில் பணியாற்றியவர்.
பூர்வீகம்: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் வணிகர் குடும்பத்தில் பிறந்த சேர்மராஜன், முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். இவரது பெற்றோர் மறைந்த எஸ்.கே. அய்யாசாமி நாடார் மற்றும் ஏ. ரத்தினம்மாள் ஆவார்.
கல்வி: பத்தாம் வகுப்பு வரை, தேனி - ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சேர்மராஜன், தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பினை முடித்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ரௌத்தர் ஹவுதியா கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்த இவர், மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வரலாற்றில் M.A. முடித்து, 1987ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பணி: ஐபிஎஸ் பணிக்காக பிகார் கேடரில் பணி ஒதுக்கப்பட்ட அவர், பிரிக்கப்படாத பிகாரில் 'ராஞ்சி' என்னும் நகரில் பயிற்சி ஐபிஎஸ்ஸாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின், சசாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், ரோஹ் தாஸ் மாவட்டத்தின் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் தேர்தல்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கள அலுவலரான சேர்மராஜன், பிகாரின் சில கடினமான காவல் மாவட்டங்களான ரோஹ்தாஸ், பாகல்பூர், முசாபர்பூர், ஜெகனாபாத் மற்றும் கிழக்கு சம்பாரண் போன்றவற்றில் துணிச்சலுடன் பணியாற்றினார்.
பிகாரில் 12ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் மத்தியப் பிரதி நிதித்துவத்தைத்தேர்ந்தெடுத்து, 1999இல் புலனாய்வுப் பணியகத்தில் சேர்ந்தார்.
உளவுத்துறையில் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் பணியாற்றினார். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார், சேர்மராஜன்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஐபிஎஸ் சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் பலரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Audio Leak: பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல்; அமைச்சருக்குத் தொடர்பா?!