இந்தியாவைச் சேர்ந்தவரை கனடாவைச்சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்தார். தற்போது தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், இதில் மனைவிக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அபய் எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில், தம்பதியினர் 40 நாள்கள் மட்டுமே ஒன்றாக வசித்ததாகவும், அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் திருமணம் என்பது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை வலியுறுத்திய நீதிபதிகள், "நாம் இன்று திருமணம், நாளை விவாகரத்து என்ற மேற்கத்திய தரத்தை எட்டவில்லை" எனக் கூறினர். கணவரின் வேண்டுகோளின் பேரில் திருமணத்தை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், ஒரு தரப்பினர் விருப்பமில்லாமல் இருக்கும்போது, பிரிவு 142இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறினர்.
தம்பதியினர் உயர் கல்வி கற்றவர்களாகவுள்ளனர். கணவர் என்ஜிஓ நடத்தி வருபவர் என்றும், மனைவி கனடாவில் நிரந்தர வதிப்பிட அனுமதி பெற்றவர் என்றும், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க தம்பதிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்காக கனடாவில் உள்ள அனைத்தையும் விட்டுவிட்டதாக மனைவி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும் திருமணத்தை ரத்து செய்யுமாறு கணவர் வலியுறுத்தினார். தனது திருமணத்தை காப்பாற்றக்கோரி மனைவி தாக்கல் செய்த இடமாற்ற மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
திருமணம் சரிவர அமையவில்லை என கணவர் வலியுறுத்தினார். மனைவி கனடாவில் பணிபுரிந்து வருவதாகவும், தனது கணவருக்காக கரோனா ஊரடங்கின்போது இந்தியா வந்ததாகவும் கூறினார்.
கணவர் தனது வயதான பெற்றோருடன் வாழ விரும்புவதாகவும், ஆனால் அவரது மனைவி கனடா கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகவும், பெற்றோருடன் வாழ வேண்டாம் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தம்பதியரை சமரச நடவடிக்கைக்கு செல்ல வலியுறுத்தியது. முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து, திருமண ஆலோசகரின் உதவியைப் பெற அனுமதித்து மூன்று மாதங்களில் அறிக்கை கோரியுள்ளது.
இதையும் படிங்க: நவம்பர் 22ல் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல்