புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு புயலின் பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், "நிவர் புயலின் போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தன. பயிர்கள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. உயிரிழப்பு ஏதுமில்லை. தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 2 ஆயிரத்து 652 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நிவர் புயலில் உயிர்சேதம் ஏற்படாத வகையில் செயல்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கும், பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் எனது சார்பிலும், புதுச்சேரி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முதற்கட்ட புயல் சேத கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலங்கள், பாதிக்கப்பட்டுள்ளன.
55 ஹெக்டேர் வாழை தோட்டங்களிலிருந்து வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. உத்தேசமாக 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் இருக்கலாம் என கணக்கெடுத்துள்ளோம். அதனடிப்படையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரிக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கடிதம் எழுதவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு