மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு மாநிலங்களுக்கு ஒதுக்குவது வழக்கம். 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 2020-21 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய மத்திய அரசின் வரிவருவாயின் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
இதன் காரணமாக, வருவாய்ப் பற்றாக்குறை, உள்ளாட்சி அமைப்புகள், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்குத் தவணை முறையில் மானியம் வழங்க 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைசெய்தது. இந்நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 12ஆவது மற்றும் இறுதி தவணைத் தொகை 6,194.09 கோடி ரூபாயை மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு 335.36 கோடி, ஆந்திரப் பிரதேசத்திற்கு 491.34 கோடி, அஸ்ஸாமுக்கு 631.48, கேரளாவிற்கு 1276.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 2020-21 நிதியாண்டில் மொத்தமாக 74,340 கோடி ரூபாயை வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக மத்திய அரசு வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்த மொத்த தொகையையும் மத்திய அரசு வழங்கிவிட்டது.
அரசியலமைப்புச் சட்டம் 275 பிரிவின்படி, நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வருவாய்ப் பற்றாக்குறையைச் சீர்செய்யும் வகையில் மாநிலங்களுக்குத் தவணை முறையில் மானியம் வழங்கப்பட்டுவருகிறது. மாநிலங்களின் வரவு செலவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு மானியம் வழங்க வேண்டும் என்பதை நிதி ஆணையமே முடிவு செய்கிறது.