பெல்காவி/தார்வாடு: இதயத்தை உருக்கும் நிகழ்வொன்று கர்நாடகாவில் நேற்று (ஜூலை 11) நிகழ்ந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த 15 வயதான இந்து சிறுமி ஒருவரின் இதயம், 22 வயதான இஸ்லாமிய இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தார்வாட் மாவட்டம் எஸ்டிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.
தொடர்ந்து, தார்வாடு மாவட்டத்தில் இருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் உள்ள பெல்காவி மாவட்டம் கேஎல்இ மருத்துவமனையில் 22 வயதான இளைஞர் இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், அந்த இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிறுமியின் இதயம் அனுப்பிவைக்கப்பட்டது. அவரின் இதயம் இரண்டு காவலர்களின் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. வழியெங்கும் போக்குவரத்து முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, எந்தவித இடையூறுமின்றி வெறும் 50 நிமிடங்களில் பெல்காவிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதயம் வரும் முன்னரே, இளைஞருக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், சரியான நேரத்தில் இதயம் அங்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவ வல்லுநர்கள் குழு, அந்த இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தது. 6 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுபெற்றது.
இதேபோன்று, அந்த பெண்ணின் கல்லீரல், ஹூப்ளி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அந்த சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் ஹூப்ளியில் உள்ள எஸ்டிஎம் மருத்துவமனை மற்றும் தத்வதர்ஷி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறும் இரண்டு பேருக்கு கொண்டுசெல்லப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஹிஜாப் அணியாமல் வர ஒப்புக்கொண்ட 6 மாணவிகளின் சஸ்பெண்ட் ரத்து!