மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தீநுண்மி பெருந்தொற்றால் 249 பேர் நேற்று (ஏப். 1) ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 41 ஆயிரத்து 104 கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய எண்ணிக்கை அதையும் விஞ்சிவிட்டதால் இரண்டாம்கட்ட ஊரடங்கு குறித்தான அச்சம் வலுத்துள்ளது.
அம்மாநிலத்தின் இறப்பு விகிதம் 1.92 விழுக்காடாக உயர்ந்தும், குணமடைந்தோர் விழுக்காடு 85.02 ஆகக் குறைந்து தொற்றின் தாக்கம் மிகவும் மோசமடைந்துள்ளது.
ஆதலால், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரை வீட்டிலும், பல்வேறு நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தியுள்ளது.
நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில் நேற்று 8,646 தொற்று பதிவாகிய நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 23 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த இறப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 708 ஆக உள்ளது. மும்பை மாநகராட்சி 650 கட்டடங்களுக்குச் சீல்வைத்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.