மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் வாஷி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.
அப்போது அவர் டோல் கேட்டுக்கு எதிராக பேசியதாகவும், இதையடுத்து அக்கட்சி தொண்டர்கள் டோல் கேட்டை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் ஏழு பேர் உள்பட ராஜ் தாக்கரே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ராஜ் தாக்கரே பலமுறை ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் இன்று வாஷி டோல் கேட் தாக்குதல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ராஜ்தாக்கரே ஆஜரானார். அவருக்கு ரூ.15 ஆயிரம் பிணை தொகையுடன் நீதிபதி பிணை வழங்கினார்.
மேலும் வருகிற மே மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்தும் அவருக்கு விலக்கு அளித்தார். முன்னதாக இந்த வழக்கில் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே ஆஜராக தவறினால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கூறியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: பாரதிய ஜனதாவுக்கு ராஜ் தாக்கரே அடுக்கடுக்கான கேள்வி!