ஹைதராபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பத்து நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று(மே.30) சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் நிர்வாகியான சாம் பிட்ரோடா வரவேற்றார். எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சாதாரண இந்தியராக ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், "சிலர் தங்களை கடவுளுக்கும் மேலானவர்கள் என நம்புகிறார்கள். அவர்கள் கடவுளுடன் அமர்ந்து உடையாடவும், நாட்டு நிலவரம் பற்றி கடவுளுக்கே கூட விளக்கமளிப்பார்கள். நமது பிரதமர் மோடி அவர்களைப் போன்ற ஒருவர்தான். நீங்கள் பிரதமர் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், மோடி பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கடவுளுக்கு விளக்கம் அளிப்பார். அப்போது தான் என்ன படைத்தேன் என்பது பற்றி கடவுளுக்கே குழப்பம் ஏற்படும்.
பாஜகவினர் விஞ்ஞானிகளுடன் உரையாடி, அறிவியல் குறித்து விஞ்ஞானிகளுக்கே விளக்கம் அளிக்கலாம். அதேபோல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாறையும், ராணுவத்தினருக்கு எப்படி போர் புரிவது என்றும் விளக்கம் அளிப்பார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையில் அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்று விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டோம். அப்போதைய சூழலில் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான சூழல் இல்லை. மக்களுடன் இணைவதற்கான வழிகளை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தடுத்தது. மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று உணர்ந்தோம். மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏஜென்சிகளால் அச்சுறுத்தப்பட்டன. அதனால், அரசியல் ரீதியாக செயல்படுவது மிகவும் கடினமாகிவிட்டது. மக்களுடன் இணைய வேண்டி இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து ஸ்ரீநகர் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தோம். மக்களுடன் சேர பாரத் ஜடோ யாத்திரை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரம், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு பாரத் ஜடோ யாத்திரையை நிறுத்த பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது.
யாத்திரையை தொடங்கிய 5,6 நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடப்பது எளிதான வேலை அல்ல என புரிந்தது. எனக்கு முழங்காலில் ஆறிப்போன காயம் ஒன்று இருந்தது. நடக்க ஆரம்பித்தபோது அது மீண்டும் காயமானது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் நடந்தும் சோர்வே இல்லை. என்னுடன் நடந்தவர்களும் சோர்வே இல்லை என்று கூறினார்கள். நடப்பது நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுடன் நடந்தது" என்று கூறினார்.
இதையும் படிங்க: கலிபோர்னியாவில் ராகுலுக்கு எதிராக பாஜகவினர் கோஷம்.. கூலாக டீல் செய்த ராகுல்!