புதுச்சேரி: புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று முன் தினம் (ஜூன்.27) நடைபெற்ற நிலையில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது “இந்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” எனக்கூறி உறுதிமொழியை வாசித்தார்.
சர்ச்சையைக் கிளப்பிய உறுதிமொழி
![ஆளுநர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e44lpkkuyacd2sj_2906newsroom_1624949716_678.jpg)
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தது முதல், அமைச்சர்கள் தொடங்கி பிற கட்சியினர் உள்பட மத்திய அரசுக்கு பதிலாக ’ஒன்றிய அரசு’ எனும் சொல்லாடல் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி அமைச்சரவையில் துணை நிலை ஆளுநர் வாசித்த இந்த உறுதிமொழி, முன்னதாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
![https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e44lpkkuyacd2sj_2906newsroom_1624949716_678.jpg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e44lqhouuae5wzb_2906newsroom_1624949716_476.jpg)
முன்னதாக, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை தவறாக சித்தரிப்பதாகவும் தன் தவறுக்கு நியாயம் சேர்க்க திமுக முயற்சிப்பதாகவும் புதுச்சேரி அதிமுகவினர் சாடியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜூன்.29) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று முன் தினம் முதலமைச்சர் ந.ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள், துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வு நடந்தேறியது. அத்தகைய பெருமைமிகு நிகழ்வில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
திரிக்கப்பட்ட வார்த்தைகள்...
இந்தப் பெருமையை மறைக்கும் அளவிற்கு ’இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று துணை நிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.
![https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1019794-tamilisai-soundararajan_2906newsroom_1624949716_210.jpg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1019794-tamilisai-soundararajan_2906newsroom_1624949716_210.jpg)
எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது ”தமிழ்நாடு அமைச்சர்களாக பதவியேற்கிறோம்” என்று கூறினார்களோ, அதேபோல் 'Indian Union Territory of Pudhucherry' என்ற வாசகம் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு" என மிக அழகாக வெகுகாலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு
இந்தப் படிவம்தான் வெகுகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்கிறார்கள். அதாவது "இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு."
இங்கு எங்குமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது, புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்குள்பட்டு இருக்கும் நிலப்பரப்பு. அதனால் இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு என்று சொல்கிறோமே தவிர இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை.
![https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e44lpkkuyacd2sj_2906newsroom_1624949716_678.jpg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e44lqotuyae0ubq_2906newsroom_1624949716_207.jpg)
ஆக மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது.
’இந்திய இறையாண்மையை குலைக்க வேண்டாம்’
ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது, தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பை மறைக்கும் அளவிற்கு தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயலவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவை: பெருமையும் வேதனையும்!