புதுச்சேரி: நாடு முழுவதும் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி மாநில அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ஆம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த அவர், 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
41 வயதான அரவிந்த் ராஜா புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர் முதலியார்பேட்டை அர்ஜுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது ஆசிரியர் பணியில் கற்றல் கற்பித்தலில் புதிய யுக்திகளை கையாண்டது, அறிவியல் ஆராய்ச்சி செயல் திட்டங்கள், சாரண செயல்பாடுகள், தேசிய பசுமை படை செயல்பாடுகள், பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்டவைக்காக தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவருக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். இதுகுறித்து அரவிந்த் ராஜா கூறுகையில், "ஒரு ஆசிரியராக நான் என்னுடைய மாணவர்களை பிள்ளைகள் போல பார்த்தேன். அதனாலேயே மாணவர்களிடம் என்னால் நெருங்கி பழக முடிந்தது. நல்ல கற்பித்தலை வழங்க முடிந்தது.
ஒரு ஆசிரியர் என்பவர் இந்த காலத்தில் அனைத்து பிரிவுகளிலும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பாடங்கள் தொடர்பான செய்திகள் மட்டுமல்லாமல் உலகளாவிய செய்திகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அறிவியல் சார்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களை சிந்திக்க வைக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் முக்கியமாக ஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாவலராக, பெற்றோராக இருத்தல் வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி