புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ”புதுச்சேரி ஆளும் அரசு முதலமைச்சரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அவர் கீழ் உள்ள அமைச்சர் அதனை மறுத்துப் பேசியிருக்கிறார்.
பல மாநிலங்களில் முரண்பாடான கருத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அது இறுதியானது; அதுவே முடிவானது; அதை மாற்ற வேண்டுமானால் முதலமைச்சர்தான் மாற்ற வேண்டும். அதற்கான காரணத்தை அவர்தான் கூற வேண்டும்.
ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள் 16ஆம் தேதி திறக்கப்படாது என அவர் கீழ் உள்ள அமைச்சர் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது விந்தையாக உள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி ஆட்சி உள்ளதா, அமைச்சர் கட்டுப்பாட்டில் இந்த ஆட்சி உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
புதுச்சேரியில் உண்மையிலேயே ரங்கசாமி ஆட்சி நடைபெறுகிறதா அல்லது பாஜக ஆட்சி நடைபெறுகிறதா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: புலிட்சர் விருது வென்ற ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழப்பு!