புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல தனியார்ப் பள்ளிகள், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் போது, அப்பள்ளிக்குப் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ததில், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார்ப் பள்ளிகள் இயங்கி வருவது தெரிய வந்து உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்துவது தவறு. மேலும் அது சட்டத்துக்கு முரணானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஊடகத் துறையில் அகலக்கால் பதிக்கும் அதானி குழுமம்! IANS செய்தி நிறுவனத்தை விலைக்கு வாங்கியது!
அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பட்சத்தில், சேர்க்கை போலியானது எனக் கருதப்பட்டு, எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் போது, பள்ளிகளுக்குப் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அங்கீகரிக்கப்படாத தனியார்ப் பள்ளிகளை https://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்குத் தரமற்ற சைக்கிள்..! ஆதாரங்களுடன் முதலமைச்சரிடம் புகார்..!