புதுச்சேரி: தற்போது வரை பிரெஞ்சு கலாச்சாரம் தொடர்ந்து வரும் புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. குறிப்பாக அங்குள்ள கப்ஸ் தேவாலயத்தில் பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இன்று திருப்பலி நடைபெற்றது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி இயேசு பிறந்த நாளானது கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகரின் முக்கிய தேவாலயங்களான தூய ஜென்மராக்கினி மாதா ஆலயம், இருதய ஆண்டவர் கோயில், நெல்லித்தோப்பு விண்ணேற்பு ஆலயம், கப்ஸ் சர்ச் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை நடந்து வருகிறது.
நூற்றாண்டு பழமையான தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயம்: மிஷன் வீதியில் உள்ள நூற்றாண்டு பழமையான தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பேராயர் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிலில் வைத்தார்.
இதையடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் 12.01 மணி ஆனதுடன் தங்களது அருகிலிருந்தவர்களுக்கு கைகளைக் குலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பிரெஞ்சு ஆதிகத்தில் இருந்த புதுச்சேரியில், தற்போது வரை பிரெஞ்சு கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது.
மூன்று மொழிகளில் நடைபெற்ற திருப்பலி: இதனை வெளிப்படுத்தும் வகையில் கப்ஸ் தேவாலயத்தின் பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இன்று திருப்பலி நடந்தது. இதில் புதுச்சேரி வாழ் பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல் புதுச்சேரியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குறிப்பாக ரயில் நிலையம் எதிரில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், கடற்கரைச் சாலையில் உள்ள கப்ஸ் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.