புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 7ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் 21ஆம் தேதி தற்காலிக சபாநாயகராக ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் முனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்று கொள்கின்றார். தொடர்ந்து 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்க உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்பது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகநாதன் தற்காலிக சபாநாயகருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "நியமன எம்எல்ஏ பதவி கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
3 நியமன எம்எல்ஏக்களின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த பொதுநல வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைப்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும், இவ்வழக்கு விசாரணைக்கும், இறுதி தீர்ப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும். எனவே, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரையில் 3 நியமன எம்எல்ஏ களுக்கும் பதவியேற்பு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை!