ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் ஒருவர், அவருடன் தங்கியிருந்த ஆணின் மீது பொய் புகார் அளித்து அவரிடம் இருந்து 4 லட்சம் பணத்தை இழப்பீடு தொகையாக பெற்றது காவல் துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பெங்களூருவுக்கு அடுத்த படியான இடத்தில் இருக்கக்கூடிய ஹைதராபாத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் புலம்பெயர்ந்து இங்கு பணிபுரிகின்றனர்.
பெரும்பாலும் இங்கு பணிபுரிபவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிலர் விடுதிகளிலும் சிலர் வாடகை வீடுகளிலும் தங்கி வருகின்றனர். இந்நிலையில் கிரண் குமார் என்பவர் மென்பொருள் பணியாளராக ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெங்கல்ராவ்நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாநகரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தங்கி வேலை பார்ப்பதற்கு அப்பகுதியில் உள்ள வாடகை அறை ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவரால் அறையின் வாடகையை முழுவதுமாக கட்ட இயலாததனால் அறையை பகிர்ந்து கொள்வதற்கு முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் தனியார் செயலி மூலம் அறையை பகிர்ந்து கொள்வதற்கான சக இருப்பினரைத் தேடியுள்ளார். இந்நிலையில் தான் பெண் ஒருவர், செயலியில் கிரண் அளித்த அனைத்து விவரங்களுக்கும் ஒப்புதல் அளித்து கிரணுடன் தங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பின்னர், அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கிவந்த நிலையில், இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்தப்பெண் பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, கிரண் அந்தப் பெண்னை வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண் கிரணுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியும், கிரண் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் காவல்துறையிடம் பொய்புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண் 'சைபராபாத் ஷீ டீம்' பிரிவில் புகார் செய்யப்பட்டதால் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்னுக்கு 4 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாகவும் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்தப்பெண் கிரணுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கிரண் சைபர் க்ரைமில் பதிவுகளை நீக்கமாறு புகார் அளித்துள்ளார். கிரணின் புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் காவல் துறையினர் அப்பெண்ணின் பதிவை நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கிரண் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து கிரண் அன்று இரவே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, அப்பகுதி காவல் அதிகாரி கூறுகையில், "கிரண் என்பவர் வாடகை வீடு எடுத்து தங்கியதில், பெண் ஒருவருடன் தங்கியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் கிரண் மீது புகார் அளித்துள்ளார். விசாரணையில் அந்தப் பெண் கிரண் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. தற்போது கிரண் மீது மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளது அந்தப் பெண்ணின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது." என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தந்தையைக் கொன்ற 17 வயது மகன்.. பின்னணி என்ன?