டெல்லி: நாட்டில் கடந்த சில நாள்களாக ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிகிறது.
சிபிஎஸ்இயின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், "சிபிஎஸ்இ போன்ற வாரியங்கள் கரோனா சூழ்நிலையிலும் மாணவர்களை தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது பொறுப்பற்ற செயல்.
இந்தப் பேரிடர் காலங்களில் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மறுசீரமைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், நெரிசலான தேர்வு மையங்களில் குழந்தைகள் நேரில் சென்று தேர்வு எழுதுவது தேவையற்ற ஒன்று. எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபிஎஸ்இ அலுவலர்கள், ”கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படியே தேர்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.