டெல்லி: உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (மார்ச்.18) துவக்கி வைத்தார். இந்தியாவின் பரிந்துரையை ஏற்று நடப்பாண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது. சிறுதானியங்களின் உலக கேந்திரமாக இந்தியாவை நிலைநிறுத்தவும், சிறுதானியங்களின் மகத்துவம் குறித்து உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜி20 அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது, இதனிடையே சர்வதேச அளவில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னேற்பாட்டு பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. மாநில அரசுகளும் சீறுதானிய உற்பத்தியை பெருக்கும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களுக்கு உலக சிறுதானிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
டெல்லியில் சுப்ரமணியம் ஹாலில் நடந்த சர்வதேச சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற வகையில் நாட்டின் 19 மாவட்டங்களில் இருந்து சிறுதானியங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
ஜி20 அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா வகிப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஒரு நாடு ஒரே குடும்பம் என கருப்பொருள் சர்வதேச சிறுதானிய மாநாட்டிலும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
சிறுதானிய வர்த்தகத்தில் ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டு பயன் பெற்று வருவதாக பிரதமர் மோடி கூறினார். சிறுதானிய திட்டத்திற்கான அரசின் பணி சிறு குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றார். சிறுதானிய சந்தை விவசாயிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
சிறுதானியத்தின் மீதான முன்னெடுப்பு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் பரிந்துரையை அடுத்து, 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா பொதுச் சபை அறிவித்ததாக தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சிறுதானிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லரை வர்த்தக நிறுவனங்கள், பல் துறை அமைச்சகங்களுக்கு சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிறுதானியனங்களில் உள்ள ஊட்டசத்துகள் அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய அமர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், அதிகாரிகள், சர்வதேச விஞ்ஞானிகள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், ஸ்டார்ட் அப் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர் போலீசில் சரண்!