டெல்லி: ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலை உச்ச வரம்பு, உற்பத்தி விலையில் 70 விழுக்காடு இருக்க வேண்டும் என தேசிய மருந்து விலை ஆணையம்(National Pharmaceutical Pricing Authority) கடந்த ஜுன் 3ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து, 104 தயாரிப்பு நிறுவனங்கள், 252 பிராண்டுகள், தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையை மாற்றியமைத்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.
எவ்வளவு குறைந்துள்ளது?
இவற்றில், 70 தயாரிப்பு நிறுவனங்கள், பிராண்டுகள் ஆகியவை விலையை 54 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இதனால், ஆக்ஸிஜன் செறிவூட்டி ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.54,337 வரை குறைந்துள்ளது.
58 பிராண்டுகள் 25 விழுக்காடு வரை விலையைக் குறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை விலையைக் குறைத்துள்ளன. 252 தயாரிப்புகளில் 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையைக் குறைக்கவில்லை.
ஒன்றிய அரசின் வர்த்தக விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற லாப வரம்பைக் குறைத்தது, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கும் நுகர்வோருக்கு சேமிப்பை உறுதி செய்துள்ளது. ஒன்றிய அரசின் வர்த்தக விலை சீரமைப்புக் காரணமாக கரோனா சிகிச்சையில் இன்றியமையாத, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.
கீழ்க்கண்ட பிரிவுகளில் அதிகபட்ச விலை குறைப்பு:
- சிறிய ரக - 5LPM (80 தயாரிப்புகளில் 19 தயாரிப்புகளின் விலைக் குறைப்பு)
- சிறிய ரக - 10LPM (32 தயாரிப்புகளில் 7 தயாரிப்புகளின் விலைக் குறைப்பு)
- நிலையான - 5LPM (46 தயாரிப்புகளில் 19 தயாரிப்புகளின் விலைக் குறைப்பு)
- நிலையான - 10 LPM (27 தயாரிப்புகளில் 13 தயாரிப்புகளின் விலைக் குறைப்பு)
அனைத்து ரக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் மாற்றியமைக்கப்பட்ட விலை ஜுன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.