வாடிகன் : ஒடிசா மாநிலம் பாலசோர் மூன்று ரயில்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்து உள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில் அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்டவர்ளை அடையாளம் காணப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே மற்றும் மருத்துவ அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ரயில் விபத்து குறித்து அறிந்த போப் பிரான்சிஸ் கவலை அடைந்தார்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்திக்க உள்ளதாக தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா பரலோகத்தை சென்றடைய போப் பிரான்சிஸ் பிரார்த்திப்பதாக தெரிவிவக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்து அறிந்தேன். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரான்ஸ் உங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன" என்று பதிவிட்டு உள்ளார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார். அதேபோல் ரஷ்ய அதிபர் புதின், ஒடிசா ரயில் விபத்து குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பும் ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : ஒடிசா ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாரணை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரை!