புதுடெல்லி: நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை அமோக வெற்றியடைய செய்ததற்காக பாஜக தலைமையகத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின்படி பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிகபட்ச தொகுதிகளில் இம்முறை வெற்றிபெற்றதன் மூலம் பாஜக புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில், இன்று(டிச.8) பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்து கட்சித் தலைமையகத்திற்கு வந்தார்.
அப்போது மக்களிடம் பேசிய பிரதமர், “கட்சி தொண்டர்களுக்கும், குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களின் வாக்காளர்களுக்கும் நன்றி. ஹிமாச்சல் பிரதேசத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு அனைத்து வழிகளிலும் நம் அரசு அவர்களுக்கு துணை நிற்கும். குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் மீண்டும் வரலாறு காணாத தேர்தல் சாதனையைப் படைத்துள்ளோம்.
மக்கள் தங்களின் நிலையான அன்பை பாஜகவிற்கு அளித்து மாபெரும் வெற்றியடைய செய்துள்ளனர். குஜராத்தின் அனைத்து வீடு மற்றும் குடும்பங்களில் உள்ளதுதான், பாஜக. பூபேந்திரா நிச்சயம் இந்த நரேந்திராவின் சாதனையை முறியடிப்பார்” எனப் பேசினார்.
இதற்கு முன்னதாக பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா , “குஜராத் , ஹிமாச்சலில் வக்களித்த வாக்காளர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் மிக்க நன்றி. குஜராத்தில் இத்தகைய வரலாறு காணாத வெற்றி நமது பிரதமர் நரேந்திர மோடியால் தான் சாத்தியமாகியுள்ளது. ஹிமாச்சலில் வெற்றியடைந்த காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: வீடியோ: பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி