டெல்லி: குஜராத்தின் சூரத் நகரம் இந்தியாவின் வைரத் தொழில் நகரமாக விளங்குகிறது. இங்குதான் உலகின் 90 சதவிகித வைரங்கள் பட்டைத் தீட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டைத் தீட்டுதல் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் நடைபெறுகிறது. இந்த பணிகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
எனவே, இதில் ஈடுபடுவோர் (வைர வியாபாரிகள், பணியாளர்கள்) ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற பெயரில் மிகப்பெரிய அலுவலகம் சூரத்தில் கட்டப்பட்டுள்ளது. சூரத்தில் 35.54 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பங்குச்சந்தை அலுவலக கட்டடம், வைர வர்த்தகத்தின் உலகளாவிய மையமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், சுமார் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில், 175 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 200 வர்த்தகர்கள் தங்கும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய வசதி மூலம், உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் வைரம் வாங்குபவர்கள் சூரத்தில் வர்த்தகம் செய்வ வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த வர்த்தக வசதி மூலம் சுமார் 1.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாவதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக சுமார் 80 ஆண்டுகள் இருந்த பென்டகனை இந்த வைர அலுவலகக் கட்டடம் முந்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “80 ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய அலுவலகக் கட்டடமாக இன்றுவரை செயல்பட்டு வரும் பென்டகனை தற்போது சூரத் வைர வர்த்தக கட்டிடம் முந்தியுள்ளது. இந்த ‘சூரத் வைர பங்குச்சந்தை’ வைர தொழில் மீதான சூரத்தின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு சான்றாகத் திகழும் இந்த பங்குச்சந்தை கட்டடம், வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும்.
மேலும், நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், உலக நாடுகளின் மொத்த பார்வையையும் இந்தியா பக்கம் ஈர்த்துள்ளது, இந்த மாபெரும் வைர பங்குச்சந்தை அலுவலகம். இந்த நிலையில், இந்த மாபெரும் அலுவலக கட்டடத்தை நாளை (டிச.16) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள்..! மேலும் ஒரு பத்திரிக்கையாளர் படுகொலை..!