டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜெ.பி. நட்டா பிகாரில் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மாணவ பருத்துவத்திலிருந்தே துடிப்புடன் செயல்பட்டு, பாஜகவின் மாணவர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.
பின்னர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். இவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், பாஜகவின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளராகவும் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் தேசியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். இவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவில், "பாஜக உங்களது துடிப்பான தலைமையின்கீழ் பல உயரங்களை எட்டியுள்ளது. நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், "பாஜக தங்களைப் போன்று வலுவான தலைமையின்கீழ் முன்னேறிவருகிறது. தங்களது முற்போக்கான சிந்தனைகளை விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "நட்டா சிறந்த உழைப்பாளி. அவரிடம் சிறந்த ஆளுமைத் திறன்கள் உள்ளன. அதன் காரணமாகவே அவர் பாஜகவின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை வலுப்படுத்துவதில் அவருடைய ஆர்வம் அளப்பரியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகள் பிரச்னை; அமித் ஷா, நரேந்திரசிங் தோமர், ஜேபி நட்டா ஆலோசனை!