டெல்லி : எதிர்க்கட்சி தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உள்ள உண்மை நிலவரத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து காங்கிரஸின் பொய் பரப்புரைகளை முறியடியுங்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸிற்கு மக்கள் குறித்து கவலையில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களிடம் இன்னமும் ஆசை உள்ளது. மக்கள் என்னை தேர்ந்தெடுத்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் அவர்களின் விதி என்ன ஆனது. எதிர்க்கட்சியாக கூட அவர்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்றவில்லை. ஆகவே நீங்கள் மக்கள் நலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், “காங்கிரஸின் உண்மைக்கு எதிராக பொய்களை முறியடியுங்கள்” என்றும் தனது கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்டோரின் டெலிபோன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- இரு அவைகளும் ஒத்திவைப்பு