டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி, மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று "மன்கிபாத்" வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று(ஜன.29) 2023ஆம் ஆண்டின் முதல் "மன்கிபாத்" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பழங்குடி மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களது எழுச்சியூட்டும் கதைகளைப் நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
டோட்டோ, ஹோ, குய், குவி, மந்தா போன்ற பழங்குடியின மொழிகளில் பணியாற்றிய பலர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். பழங்குடிகளின் வாழ்க்கை நகர வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது, அதற்கென பல்வேறு சவால்கள் உள்ளன. அதையெல்லாம் மீறி, பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க முனைப்போடு உள்ளனர்.
இந்த விருதுகளால் இப்போது மொத்த உலகமும் பழங்குடிகளை அறிந்து கொள்ளும். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், சித்தி, ஜார்வா, ஓங்கே பழங்குடியினருடன் பணிபுரிந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய இசைக்கருவிகளான சந்தூர், பாம்ஹம், த்விதாரா போன்ற இசைக்கருவிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த முறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை