கொல்கத்தா: பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து நூபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது.
நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்த பாஜகவின் நவீன் ஜிண்டால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருவரையும் கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் நடந்த போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்தது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பது, கல் வீசி தாக்குதல் நடத்துவது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. கலவரத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஹவுரா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின்னணியில் சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவர்கள் மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாது, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவினர் செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் போராட்டத்தில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு