டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம், 2020-21ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி இழப்பை (ஒரு நாளைக்கு சுமார் ரூ.4.65 கோடி இழப்பு) சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, இந்த இழப்பு 2019-20ஆம் ஆண்டில் பதிவான ரூ.2,943.32 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 1,240 கோடி ரூபாய்க்கு தற்போது குறைந்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நிதியாண்டாகும்.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 2020-21ஆம் ஆண்டில் சுமார் 10 விழுக்காடு குறைந்து ரூ.3,186 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 3,540.77 கோடியாக இருந்தது.
இது குறித்து, பேடிஎம் செய்தித் தொடர்பாளரைத் தொடர்புகொண்டபோது:
"குறிப்பாக கடந்த ஆண்டின் முதல் பாதியில் கரோனா தொற்றால் எங்கள் வணிக பங்குதாரர்களின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டது. கடும் முயற்சியினால் ஆண்டின் பிற்பகுதியில் எங்களின் வருவாயில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்" என்றார்.