டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், பாஜக அரசு நாடாளுமன்றத்தை பொருத்தமற்றதாக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "எதிர்கட்சிகள் ஏன் பாஜக அரசை எதிர்கின்றன? அதற்கு முதல் காரணம் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றபின்பு நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களில் 12 விழுக்காடு மட்டுமே நாடாளுமன்ற குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மோடி முதல் முறை பதவியேற்றபோது இது 27 விழுக்காடாக இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல்முறையாக ஆட்சிக்குவந்தபோது, இது 60 விழுக்காடாகவும், இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபோது, 70 விழுக்காடாகவும் இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் கண்டித்து, கடந்த 14ஆம் தேதி டெல்லியில் பேரணியாக சென்றனர். அப்போது, மக்களவை, மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், "மாநிலங்களைவ, மக்களவை இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கேட்டபோது பாஜக அரசு அதனை மறுத்தது.
பாஜக தங்களது பெரும்பான்மையை, நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நிகழ்ச்சி நிரலை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்க பயன்படுத்திவருகிறது" எனவும் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க: ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!