தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சம் தொட்டுள்ளது. காலை பனிமூட்டம் உச்சம் தொட்டதை அடுத்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
இதன் காரணமாக, டெல்லியில் உள்ள நெடுஞ்சாலைகள், நகர்ப்புறங்களில் காலை முதல் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவம் அறிந்து டெல்லி காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தன.
காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சேதமடைந்த வாகனங்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். காற்று மாசு பிரச்னை காரணமாக டெல்லி தொடர்ந்து தவித்துவருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு காரணமாக காற்று மாசு ஏற்படுவது வழக்கமான பிரச்னையாகக் கருதப்படுகிறது.
தீபாவளியில் பட்டாசு வெடித்தால் மாசு அதிகமாகும் என்பதால் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கபட்ட நிலையில், அதை மீறி நேற்று அதிகளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால்தான், இன்று நாள் முழுவதும் தீவிர மாசு நிகழ்வதாக சூழியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவி கடிதம் - பேருந்து சேவையைத் தொடங்கிய போக்குவரத்துக் கழகம்