டெல்லி: தலைநகர் டெல்லியில், கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த ஆறு நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் முதல் நாளில் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், கரோனா தொற்று உள்ள பகுதிகள், மருத்துவமனைப் பகுதிகளில் ஆம்புலன்சின் ஷைரன் சத்தம் எதிரொலித்த வண்ணமே இருந்தன.
ஏழு நாள்களில் கோவிட்-19 மரணங்கள்
கடந்த ஏழு நாள்களில் (ஏப்ரல் 14-ஏப்ரல் 20) 1,202 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 277ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 638ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் செவ்வாய் அன்று 28 ஆயிரத்து 395 புதிய கரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஒரேநாளில் அதிக கரோனா பாதிப்பு பதிவானது நேற்றைய நாள்தான். தற்போதைய சூழலில், டெல்லியில் 85 ஆயிரத்து 575 தொற்றாளர்கள் உள்ளனர். இதில், 40 ஆயிரத்து 124 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
படுக்கை வசதிகள்?
கரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றைப் பெறுவது மிகுந்த சிரமமாக உள்ளது. டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா திங்களன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வென்டிலேட்டர் வசதியுடன் 1,449 ஐசியு படுக்கை வசதிகள் உள்ளதாகவும், அதில், 7 மட்டுமே காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வென்டிலேட்டர் வசதியில்லாத 3,123 ஐசியு படுக்கைகளில் 23 மட்டுமே காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், டெல்லி அரசின் கரோனா செயலில் நேற்றிரவு 8.30 நிலவரப்படி, அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதியுடன்கூடிய ஒரு படுக்கைக்கூட இல்லை என்பது தெரியவருகிறது.
இதையும் படிங்க: 'மக்கள் உயிரை எப்படி காக்கப்போகிறார் என பிரதமர் பதிலளிக்க வேண்டும்'