நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொண்டதாகக் கூறி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவர்கள் மீது இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.
இது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் எனவும், இந்நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சௌக் நோக்கி பேரணி நடத்தினர்.
இடைநீக்கம் விவகாரம் மட்டுமல்லாது, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற விவகாரங்களையும் முன்னிறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்குப் பின் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது. எதிர்க்கட்சியினர் தங்களின் குரலை எழுப்ப அரசு அனுமதிப்பதில்லை.
நாடாளுமன்றம் ஒரு மியூசியம் போல மாறிவிட்டது. அனைத்து சட்டங்களும் எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பீகாரில் பட்டியலினத்தோர் மீது தாக்குதல்!