ஹைதராபாத்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது.
இருப்பினும், இவர்கள் இறுதி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நிர்ணயிக்கும் பரிசீலனைக்கு தகுதி பெற மாட்டார்கள். எனவே, அத்திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் நாட்டம் கொண்ட இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீகாரில் மூன்றாவது நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செகந்தராபாத் ரயில் நிலையத்தில் போராடிய இளைஞர்கள் சிலர், அங்கிருந்த ஹைதராபாத் - கொல்கத்தா செல்லும் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்தனர். மேலும், அங்கிருந்த சரக்கு பார்சலுக்கும் தீ வைக்கப்பட்டது.
அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிடும்படியும், ராணுவ ஆட்சேர்ப்பில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ரயிலுக்கு தீ வைத்த இளைஞர்களை ரயில்வே துறை காவலர்கள் கைதுசெய்தனர். ஆனால், ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அதிகமானோர் கூடியுள்ள நிலையில், சூழலை கட்டுக்குள் வைக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா செகந்தராபாத் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய தடியடியில் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்கள் பலரும் காயமுற்றனர். காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில், 8 பேர் மீது குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்னிபாத் போராட்டம்: தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு