திருவனந்தபுரம்: நாடு முழுவதும் கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு முக்கிய பண்டிகைகளும் கொண்டாடப்படாமல் இருந்து. அந்த வகையில் ஓணம் பண்டிகையும் கொண்டாடப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில், இந்தாண்டு ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போல் இன்றி, மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்காமல், பலவிதமான வண்ணங்களில் உள்ள மலர்களால் வீடுகளை அலங்கரித்து, பூக்கோலம் போட்டு, குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புதிய ஆடைகள் பரிசாக அளித்து, ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
வாழை இலையில் பரிமாறப்படும் பல்வேறு பாரம்பரிய சைவ உணவுகள், ஊறுகாய்கள் மற்றும் இனிப்பு வகைகளை உள்ளடக்கிய விருந்தைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகள் கொண்டாட்டத்தை சேர்த்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகை, மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். மக்களை காப்பதிலும், அக்கறை கொள்வதிலும் சிறந்து விளங்கியவர். இவர் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் குள்ள உருவில் வாமன அவதாரம் எடுத்து வந்து, தனக்கு தானமாக மூன்றடி மண் கேட்டார்.
மகாபலி அதை கொடுக்க ஒப்புக் கொண்டார். ஒரு அடியால் பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடி எங்கே வைக்க என வாமனன் கேட்க, தன் தலை மீது வைக்குமாறு பணிந்தார் மகாபலி சக்கரவர்த்தி. மகாபலி சக்கரவர்த்திக்கு முக்தி அளிக்க வேண்டி வாமனன் தன் மூன்றாவது அடியை மகாபலி மீது வைத்து அவரை பாதாள உலகிற்கு அனுப்பினார்.
தன் மக்கள் மீது மிகுந்த பாசமும் வைத்திருந்த அவர், ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து தன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் திருவோண திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து தனது மக்களை காண வருவதாகவும், அவர் ஒவ்வொ வீட்டிற்கும் செல்வதாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதில், “அனைவருக்கும், குறிப்பாக கேரளா மற்றும் மலையாள மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை அன்னை இயற்கையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளி விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் மேம்படுத்துகிறது” என குறிப்பிட்டார். இவரைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர், அனைத்து குடிமக்களுக்கும் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பழம்பெரும் மதுரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட ஓணம்