பாரமுல்லா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக நேற்று(அக்.4) ஜம்மு காஷ்மீர் சென்றார். இன்று பாரமுல்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் 1990களில் இருந்து பயங்கரவாதத்தால் 42,000 உயிர்கள் பறிபோயுள்ளன. பயங்கரவாதத்தால் யாருக்காவது நன்மை இருக்கிறதா? அதனால், இளைஞர்கள் வன்முறை பாதையைத் தவிர்க்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அப்துல்லாக்கள், முஃப்திகள், நேரு குடும்பங்கள்தான், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியின்மைக்கு காரணம். அவர்கள் காஷ்மீருக்காக எதுவும் செய்யவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால், 3 குடும்பத்தினர் மட்டுமே பலன் பெற்றுள்ளன. ஆனால், பிரதமர் மோடி அரசால், ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுள்ளனர். காஷ்மீர் முதலீட்டில் பெரிய பயன் பெற்றுள்ளது. 3 ஆண்டுகளில் மட்டும் 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடுகளை மோடி அரசு வழங்கியுள்ளது, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? பேச மாட்டோம்.
பாரமுல்லா மக்களுடன் பேசுவோம், காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். மோடி அரசு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளவில்லை, அதை துடைத்தெறிய விரும்புகிறது. ஜம்மு காஷ்மீரை நாட்டின் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முழு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் இரண்டு என்கவுன்ட்டர்களில் சுட்டுக்கொலை!