குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த வேளாண் சட்டங்கள் தொடர்பான டூல்கிட் என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோர் இணைய ஆவணமான டூல்கிட்டை தயாரித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி கைது செய்யப்பட்ட நிலையில், நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோர் தேடப்பட்டுவந்தனர். இதனிடையே, இருவருக்கு முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இருவரிடமும் டெல்லி சைபர் பிரிவு காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்று பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி, சாந்தனு, நிகிதா ஆகியோர் பங்கேற்ற சூம் கால் குறித்த விவரங்களை கூகுள் நிறுவனத்திடம் டெல்லி காவல்துறை கோரியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஐபி அட்ரஸிலிருந்து டூல்கிட் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.