கரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறிப்பாகப் பிரிட்டனிலிருந்து புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் புத்தாண்டு கொண்டாடத் தடைவிதித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவில், 'டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை டெல்லியில் இரண்டு நாள்கள் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளன. இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்' எனக் கூறப்பட்டிருந்தது.
அதேபோல் டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் பிறப்பித்த உத்தரவில், 'டெல்லியில் இரண்டு நாள்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31 அன்று காலை 11 மணி முதல் 2021 ஜனவரி 1 வரை பொது இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
அதே போல் இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான பார்களில் இரவு 10 மணிக்கு மேல் எந்தக் கொண்டாட்டங்களும் நடைபெறக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பொது கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் புத்தாண்டை தங்களது வீடுகளில் கொண்டாடுமாறு அரசு சார்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.