நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று (அக்-18) பயங்கரவாத கும்பல்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்பட பல மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வெளி நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ரவுடிகள், போதைப்பொருள் கடத்தல் காரர்கள் ஆகியோர்களின் தொடர்பை துண்டிக்க இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 14 ஆம் தேதி அன்று ட்ரோன் டெலிவரி வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளுக்கு பிறகு என்ஐஏ தரப்பில், ‘இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 9 மாதங்களில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 191 ட்ரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் நாட்டின் பாதுகாப்பு மீது பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்கவும் பாதுகாப்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் (ட்ரோன் ) ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் அழித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:இன்டர்போல் பொதுச்சபையில் இன்று பிரதமர் உரையாற்றுகிறார்