தேசிய தலைநகர் டெல்லியில் மிக முக்கிய நபர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் புலனாய்வு அமைப்பினர், சிறப்பு படை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து சோதனை நடத்தினர். இரண்டு நகரங்களிலும் பல பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அப்துல் லதீப் மிர் (22) பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றொரு நபரான அஷ்ரப் கத்தானா குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் புலனாய்வு அமைப்பினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முன்னதாக, அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டுருந்தனர். பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் அவர்களின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.