மத்தியப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களுமான துல்சிராம் சிலவாத், கோவிந்த் சிங் ராஜ்புட் ஆகிய இருவரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் தற்காலிக ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான இவர்கள், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், அமைச்சர் பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்கள்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து சிந்தியா விலகியதையடுத்து 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகினார்கள். இதையடுத்து, கடந்தாண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி, அவர்கள் சிவராஜ் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாலும் கரோனா காரணமாக இடைத்தேர்தல் நடைபெறாததாலும் அவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஓராண்டு காலத்திலேயே, பாஜக அமைச்சரவை மூன்று முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 23ஆம் தேதி, பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21ஆம் தேதி, நரோட்டம் மிஸ்ரா, துல்சிராம் சிலவாத், கோவிந்த் சிங் ராஜ்புட், கமல் படேல், மீனா சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.