கொல்கத்தா: திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நேற்று (ஜூன் 5) நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து முக்கிய நிர்வாகிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். அதன்படி, கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜியை தேசிய பொதுச்செயலாளராக நியமிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பின்னர், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர் சந்திப்பில், "கட்சியில் ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும் என்று செயற்குழுவில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேசிய பொதுச்செயலாளர் பதவிக்கு அபிஷேக் பானர்ஜியை கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பரிந்துரைத்தார்" என்று தெரிவித்தார்.
இதன்படி, மம்தா பானர்ஜியின் பரிந்துரையின் அடிப்படையில் அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி வகித்துவந்த இளைஞர் பிரிவு தற்போது நடிகராக இருந்த சயோனி கோஷுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சுப்ரதோ பக்சி இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்!